“கோட்சேவை தேசபக்தர்’ என புகழ்ந்த பெண் எம்.பி.பிரக்யா தாகூர்..! கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய பாஜக!!

தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தேச பக்தர் என மக்களவையில் புகழாரம் சூடிய பாஜக பெண் எம்.பி.பிரக்யா தாகூருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந் நிலையில், அவர் மீது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பாஜக மேலிடம் அறிவித்துள்ளது.

 

பிரக்யா தாகூர்… பாஜகவைச் சேர்ந்த பெண் சாமியாரான இவர், மத்தியப் பிரதேச மாநில தலைநகரான போபால் மக்களவைத் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார். அடிக்கடி பல்வேறு சர்ச்ச்சைக் கருத்துக்களைக் கூறி பகீர் கிளப்புவது இவரது வாடிக்கை. 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மாலேகான் குண்டு வெடிப்பிலும் முக்கியக் குற்றவாளியான பிரக்யா, சில காலம் அரசியல் நடவடிக்கைகளில் பாஜகவால் ஓரம் கட்டப்பட்டிருந்தார்.

 

கடந்த மக்களவைத் தேர்தலின் போது மீண்டும் அரசியலில் குதித்த பிரக்யா, போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். அப்போது மகாத்மாவை கொன்ற கோட்சேவை, ஒரு உண்மையான தேச பக்தர் என்று பிரக்யா கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்காக தேர்தல் ஆணையத்தின் கண்டனத்துக்கும் ஆளானார்

இந்நிலையில், நேற்று மக்களவையில், காங்கிரஸ் தலைவர் சோனியா குடும்பத்தினருக்கு எஸ்பிஐ பாதுகாப்பு விலக்கப்பட்டது தொடர்பாக திமுக எம்.பி., ஆ.ராசா பேசிக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட பிரக்யா தாகூர், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தேச பக்தர் என்று புகழ்ந்தார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்கவே, பிரக்யாவின் பேச்சை சபைக் குறிப்பில் இருந்து நீக்கி விட்டதாக சபாநாயகர் ஓம் பால் தெரிவித்தார்.

 

ஆனாலும், பிரக்யாவின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, மக்களவையில் இன்று ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் தீர்மானித்திருந்தது. ராகுல் காந்தி இன்று மக்களவை கூடும் முன் கருத்து கூறுகையில், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கருத்தைத் தான் பிரக்யா எதிரொலித்துள்ளார். இதனால் இது குறித்து விவாதிப்பது நேரத்தை வீணடிப்பது போன்ற தாகி விடும் என அதிருப்தியாக கருத்து கூறியிருந்தார்.

 

பிரக்யாவின் கருத்துக்கு எழுந்த எதிர்ப்பை சமாளிக்கும் விதமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஒரு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். அதில், பிரக்யா கூறிய கருத்து கண்டனத்திற்குரியது. பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா தாகூர் நீக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த குளிர் கால கூட்டத் தொடர் முடியும் வரை பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்சியிலிருந்து அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் முடிவு செய்யப்படும் எனவும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

 

இதற்கிடையே இன்று மக்களவையில், பிரக்யா தாகூரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரச்னை எழுப்ப முயன்றன. அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.


Leave a Reply