”மந்திரக்காரியாக நினைக்கிறார்கள்” : 20 விரல்களுடன் பிறந்ததால் வருந்தும் பெண்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என தொடங்கும் வள்ளுவரின் வாக்கின்படி பிறப்பினால் யாருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லை. ஒருவர் மாற்றுத்திறனாளியாகவோ, மூளை வளர்ச்சி குறைபாடுடனோ அல்லது வேறு ஏதேனும் குறைகளுடன் பிறந்தாளோ அவர்களை இந்த சமூகம் சக மனிதர்களைப் போல அங்கீகரிப்பதில்லை.

 

ஆட்டுக்குட்டியோ அல்லது கன்று குட்டியோ ஆறு கால்கள் அல்லது இரண்டு தலைகளுடன் பிறந்தால் அதிசயமாக பார்க்கும் மக்கள் ஒரு மனிதர் வினோதமாகப் பிறந்தால் அவரை ஒதுக்குகிறார்கள். அவர்களும் நம்மைப் போன்ற ஒரு மனிதர் தான் என பெரும்பாலானோர் நினைப்பது இல்லை.

 

அரசியலிலும், நாகரீகத்திலும் இந்தியா எத்தனை உயரம் சென்று நிலவில் கால் பதித்தாலும் நிலாவில் பாட்டி வடை சுடுகிறார் என்ற கட்டுக்கதைகள் இதுவரை மறைந்த பாடில்லை. அதுமட்டுமல்லாமல் பில்லி சூனியம், மாயம், மந்திரம், ஏவல் என பல மூட நம்பிக்கைகளிலும் இச்சமூகம் இன்னும் மூழ்கி கிடக்கிறது என்றால் அதை யாரும் மறுப்பதற்கில்லை.

 

இந்த மூட நம்பிக்கைகள் அவர்களின் தனிப்பட்ட கருத்துகளாக மட்டுமல்லாமல் அடுத்தவர்களின் மீது திணிக்கப்படும் போது தான் அதன் வன்மம் மிகக் கொடியதாக மாறுகிறது. அதன்படி காலில் 20 விரல்களுடன், கையில் 12 விரல்களுடன் பிறந்த பெண் ஒருவர் மக்களின் மூட நம்பிக்கையால் தனது வாழ்வையே வெறுத்த நிகழ்வு ஒடிசாவின் நிகழ்ந்துள்ளது.

 

ஒடிசா மாநிலம் கஞ்ச் மாவட்டத்தில் பிறந்தவர் நாயக் குமாரி. வயது 65. இவர் பிறக்கும் போதே 20 கால் விரல்கள் மற்றும் 12 கைவிரல்கள் உடன் பிறந்தார். தன் குடும்பத்தின் வறுமை காரணமாக அவரால் மருத்துவ சிகிச்சை பெற இயலவில்லை.

இவருக்கு 20 கால் விரல்கள் மற்றும் 12 கைவிரல்கள் இருப்பதை கண்ட கிராம மக்கள் அவரை மந்திரக்காரி என சிறு வயது முதலே ஒதுக்கி வைத்துள்ளனர். அத்துடன் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர். இதனால் சக மனிதர்களுடன் பழக முடியாமல் உயிரோடு இருக்கும்போது யாரோடும் இல்லாமல் வாழ்கிறார் அந்த மூதாட்டி.

 

கால் கைகளில் இயல்பான எண்ணிக்கைக்கு மேற்பட்ட விரல்களை கொண்டவர்களின் பாலிடெக்டலி என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இது மரபணு பிழையால் ஏற்படுகிறது. 5 ஆயிரம் பேரில் ஒன்று அல்லது இரண்டு பேர் இதுபோன்று பிறப்பார்கள் என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

இதை கூடப் புரிந்து கொள்ளாமல் சக மனிதரை தள்ளி வைத்து வாழும் மூட சமூகம் மாற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.


Leave a Reply