திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளத்தில் குளித்த இரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகிழிபட்டி என்ற கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிவேல் என்பவரின் மகள் ரமணி மற்றும் லக்ஷ்மி. இரட்டை சகோதரிகளில் ரமணி கல்லூரியில் படித்து வந்தார். லட்சுமி திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றினார்.
தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மகிழிப்பட்டிக்கு வந்த இருவரும் குளிப்பதற்காக தாயோடு ஆணை கல் எனுமிடத்தில் உள்ள குளத்திற்கு சென்றிருக்கிறார்கள். குளம் தூர்வாரப்பட்டு இருந்ததால் அதன் உட்பகுதி சற்று ஆழமாக இருந்துள்ளது.
அதை அறியாமல் குளித்துக்கொண்டிருந்த ரமணியும், லக்ஷ்மியும் ஆழமான இடத்திற்கு சென்றதால் நீரில் மூழ்கினர். நீச்சல் தெரியாமல் தத்தளித்த இருவரையும் காப்பாற்றும்படி தாய் வளர்மதி கூச்சலிட்டு உள்ளார். அதை கேட்டு ஓடி வந்த சிலர் ரமணி மற்றும் லக்ஷ்மியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
எனினும் இரட்டை சகோதரிகளை காப்பாற்ற முடியவில்லை. ரமணி மற்றும் லக்ஷ்மியின் உடல்கள் கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.