--- --:--:-- --

வந்தே பாரத் வேகத்தில் சென்ற வைகை எக்ஸ்பிரஸ்!

6

சென்னை மற்றும் மதுரைக்கு இடையே இயக்கப்படும் வைகை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட காலதாமதத்தைச் சரிசெய்யும் விதமாக வழக்கமான பயண நேரத்தை விட இரண்டு மணி நேரம் முன்னதாகவே சென்றடைந்து புதிய சாதனையைப் படைத்துள்ளதாக ஈ.டிவி பாரத் தெரிவித்துள்ளது. வழக்கமாக செங்கல்பட்டு முதல் மதுரை வரையிலான 430 கி.மீ தொலைவைக் கடக்க 7 மணி 35 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் இந்த ரயில், இம்முறை வெறும் 5 மணி 35 நிமிடங்களில் அத்தொலைவைக் கடந்து அசத்தியுள்ளது.

 

கடந்த அக்டோபர் 24 அன்று தெற்கு ரயில்வேயால் இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூரிலிருந்து அதன் வழக்கமான நேரத்தை விட சுமார் 10 நிமிடங்கள் தாமதமாகப் பிற்பகல் 1:25 மணிக்குக் புறப்பட்டது. தொடர்ந்து, கோடம்பாக்கம் அருகே நடைபெற்ற தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் மற்றும் வழியில் ஏற்பட்ட தடைகள் காரணமாக மேலும் 20 நிமிடங்கள் வரை தாமதத்தைச் சந்தித்தது. இருப்பினும், ரயில் ஓட்டுநர்கள் பெரும்பாலான பாதைகளில் வந்தே பாரத் ரயில்களுக்கு நிகராக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயிலைச் செலுத்தினர்.

 

 

ரயில் பயணங்கள் மற்றும் அவற்றின் வேகங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் அருண் பாண்டியன் என்ற தொடர் பயணி தெரிவித்த தகவலின்படி, இந்த ரயில் பிற்பகல் 2:25 மணிக்குத் தாம்பரத்தைச் சென்றடைந்து 2:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது. பின்னர் 2:58 மணிக்குச் செங்கல்பட்டை அடைந்த ரயில், அங்கிருந்து விழுப்புரம் வரையிலான 103 கி.மீ தொலைவை வெறும் ஒரு மணி நேரம் 4 நிமிடங்களில் கடந்தது. விழுப்புரத்தில் மதுரை கோட்டத்தைச் சேர்ந்த லோகோ பைலட்டுகள், உதவி லோகோ பைலட்டுகள் மற்றும் ரயில் மேனேஜர் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

 

 

அதன் பிறகு, மதுரை பகுதிக்கு அருகே நடைபெற்ற கட்டுமானப் பணிகள் காரணமாக வேகம் சற்று குறைக்கப்பட்ட போதிலும், இரவு 8:37 மணிக்கெல்லாம் மதுரை சந்திப்பின் 7-வது நடைமேடையை ரயில் வந்தடைந்தது. இச்செயல்பாட்டை சென்னை-விஜயவாடா பாதையில் இயங்கும் ராஜ்தானி, கொரோமண்டல் மற்றும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் வேகத்தோடு அவர் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.

 

வைகை எக்ஸ்பிரஸ் இதுபோன்று தாமதத்தைச் சரிசெய்வது இது முதல் முறையல்ல. கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 3 அன்று, மதுரையிலிருந்து காலை 7:05 மணிக்குக் கிளம்ப வேண்டிய ரயில், இயந்திரக் கோளாறு காரணமாகக் காலை 7:26 மணிக்கு 21 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது. ஆனால், சென்னைக்கு அதன் வழக்கமான வருகை நேரமான பிற்பகல் 2:30 மணிக்கு முன்பாகவே, அதாவது பிற்பகல் 2:07 மணிக்கெல்லாம் சென்றடைந்து சாதனை படைத்தது.

 

 

1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சென்னை மற்றும் மதுரையை இணைக்கும் வகையில் தொடங்கப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ், இந்திய ரயில்வே வரலாற்றில் பல்வேறு மைல்கற்களைக் கொண்டுள்ளது. இதுவே மீட்டர்கேஜ் பாதையில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் இயக்கப் பெற்ற இந்தியாவின் முதல் ரயிலாகும். மேலும், மீட்டர்கேஜ் பாதையில் உணவகப் பெட்டி வசதியுடன் இயக்கப்பட்ட முதல் ரயிலும் இதுவே. தொடர்ந்து 1994-இல் மீட்டர்கேஜ் ரயிலில் 42 இருக்கைகள் கொண்ட முதல் ஏசி பெட்டியையும், 2019-இல் எல்.எச்.பி எனப்படும் நவீன பெட்டிகளையும் அறிமுகப்படுத்தி வைகை எக்ஸ்பிரஸ் தனது தனித்துவத்தைத் தக்கவைத்து வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon