அன்லிமிடெட் கால், தினமும் 1 ஜிபி முதல் 3ஜிபி வரை நெட் இலவசம் என்றெல்லாம் சலுகைகளை வழங்கி வந்த செல்போன் நிறுவனங்கள், இப்போது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், கட்டண உயர்வை அறிவிக்க ஆரம்பித்துள்ளன.
நாட்டில் செல்போன் பயன்பாடு அதிகரிக்க, புற்றீசல் போல் செல்போன் சேவை நிறுவனங்களும் அதிகரித்தன. வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக ஏராளமான சலுகைகளையும் வாரி வழங்கின. தடாலடியாக இந்தத் துறையில் மூக்கை நுழைத்த அம்பானி குழுமத்தின் ஜியோ நெட்வொர்க், நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு சலுகைகளை வாரி வழங்க, அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஏர்டெல், வோடவோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் முழி பிதுங்கின. இந்த நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி நஷ்டத்தையும் சந்திக்க நேர்ந்து தள்ளாட ஆரம்பித்தன.
சலுகைகளை வாரியிறைத்து அதிக வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்திய ஜியோ நிறுவனம், தனது உண்மை முகத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தது. இனிமேல் அன்லிமிடெட் இலவச கால் என்பதற்கு முடிவு கட்டியது கடந்த மாதம் முதல் ஜியோ தவிர்த்து மற்ற நெட்வொர்க்குடன் தொடர்பு கொள்ள நிமிடத்திற்கு 6 பைசா என கட்டணம் நிர்ணயித்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இந்நிலையில் கடந்த காலாண்டில் மட்டும் ரூ.72 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாகக் கூறியுள்ள வோடவோன் – ஐடியா நிறுவனம், வரும் டிசம்பர் முதல் தேதி முதல் கட்டண உயர்வை கொண்டு வரப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் எவ்வளவு கட்டண உயர்வு என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இதே போன்று ஏர்டெல் லும் கட்டணத்தில் மாற்றம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி செல்போன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.