உள்ளாட்சித் தேர்தல்: திமுகவில் விருப்ப மனு வழங்க அவகாசம் நீட்டிப்பு

திமுக சார்பில்,உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் இறுதிக்குள் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. இதனால் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனு பெறுவதிலும் பிரதான கட்சிகள் மும்முரமாகியுள்ளன.

 

ஆளும் அதிமுக சார்பில் கடந்த 15, 16 தேதிகளில், மாவட்ட அதிமுக தலைமை அலுவலகங்களில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பிலும் கடந்த 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு, அக்கட்சியினர் மனு செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில், பல்வேறு மாவட்ட செயலாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 27-ந் தேதி விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என திமுக சார்பில் அறிவிக்க்ப்பட்டுள்ளது.


Leave a Reply