பல மடங்கு உயர்ந்த உள்நாட்டு விமான கட்டணங்கள்!
ஆயுத பூஜை மற்று தசரா பண்டிகையையொட்டி, 4 நாட்கள் தொடர் விடுமுறையால், சென்னையில் வசிக்கும் மக்களில் பலரும் ஒரே நேரத்தில் வெளியூர் பயணம் மேற்கொள்வதால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் உள்நாட்டு விமான பயண கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தசரா பண்டிகை, ஆயுத பூஜை விழா, வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதை ஒட்டி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள், செவ்வாய் ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறைகள் வருகின்றன. இதை அடுத்து சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள், 4 நாட்கள் தொடர் விடுமுறையை, சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று, மகிழ்ச்சியாக கழிப்பதற்காக, குடும்பத்தோடு வெளியூர் புறப்பட்டு செல்கின்றனர். அவ்வாறு ஒட்டுமொத்தமாக பொதுமக்கள் புறப்பட்டு செல்வதால், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்கள், பேருந்துகள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இதை அடுத்து பெரும்பாலான பயணிகள், சென்னை விமான நிலையத்தில் இருந்து, விமானங்களில் பயணம் மேற்கொள்வதால், சென்னையில் இருந்து தூத்துக்குடி, கோவை, சேலம், திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூர், ஹைதராபாத், விஜயவாடா, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட விமானங்களில், டிக்கெட் கட்டணங்கள், பல மடங்கு அதிகரித்துள்ளன. அதில் மதுரை, திருச்சி விமானங்களில் மட்டும் கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எண் வழித்தடம் சாதாரண நாள் கட்டணம் இன்றைய கட்டணம்
1 சென்னை- தூத்துக்குடி ரூ.7,201 ரூ.17,363
2 சென்னை – மதுரை ரூ.5,459 ரூ.8,537
3 சென்னை- திருச்சி ரூ.5,066 ரூ.9,896
4 சென்னை – கோவை ரூ.5,373 ரூ.16,601
5 சென்னை- சேலம் ரூ.4,264 ரூ.12,237
6 சென்னை- திருவனந்தபுரம் ரூ.6,745 ரூ.20,448
7 சென்னை- கொச்சி ரூ.5,986 ரூ.18,255
8 சென்னை- பெங்களூர் ரூ.4,474 ரூ.18,041
9 சென்னை- ஹைதராபாத் ரூ.4,467 ரூ.21,665
10 சென்னை- விஜயவாடா ரூ.5,272 ரூ.14,344
11 சென்னை- மும்பை ரூ.6,469 ரூ.22,353
12 சென்னை- டெல்லி ரூ.9,208 ரூ.23,099
13 சென்னை- கொல்கத்தா ரூ.8,219 ரூ.17,625
இன்று சென்னை- சேலம், நேரடி விமானத்தில் டிக்கெட்டுகள் இல்லாததால், பெங்களூர் வழியாக, சேலம் செல்ல கட்டணம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்து உள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைப்போல் விழா காலங்களில் பயணிகள் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்த கூடாது என்று, விமான நிறுவனங்களுக்கு டி ஜி சி ஏ எனப்படும், விமான பாதுகாப்பு துறை உத்தரவிட்டும், அதையும் மீறி விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்து உள்ளன என்று பயணிகள் தரப்பில் புகார் கூறுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





