அரசு முறைப் பயணமாக 10 நாள் அமெரிக்க சுற்றுப்பயணம் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு சென்னை திரும்புகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அதிமுக சார்பில் தடபுடல் வரவேற்பளிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டன், அமெரிக்கா, துபாய் என 13 நாட்கள் வெளிநாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் பலரும், அரசு உயர் அதிகாரிகளும் சென்றனர்.
தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் 10 நாள் அரசு முறைப் பயணமாக கடந்த 7-ம் தேதி அமெரிக்கா பயணமானார். அவருடன் அவருடைய மனைவி, மகனும் தேனி தொகுதி எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மற்றும் நிதித்துறை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழுவினரும் சென்றனர். அமெரிக்கா புறப்பட்ட ஓ.பி.எஸ்.சை சென்னை விமான நிலையத்தில் அதிமுகவினரும், அரசு உயர் அதிகாரிகளும் தடபுடலாக வழியனுப்பி வைத்தனர்.நியூயார்க், வாஷிங்டன், ஹுஸ்டன் என அமெரிக்க நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஓ.பி.எஸ், அங்குள்ள தமிழ் தொழிலதிபர்களை தமிழகத்தில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
அமெரிக்காவில் உள்ள தமிழர் அமைப்புகள் பலவும் ஓ.பி.எஸ்.சுக்கு சிறப்பான வரவேற்பளித்து வீரத் தமிழ் மகன், பண்பின் சிகரம் என்பது போன்ற பல்வேறு பட்டங்களையும், விருதுகளையும் வழங்கி கவுரவித்தன.இந்நிலையில், 10 நாள் அமெரிக்கா சுற்றுப்பயணம் முடிந்து, இன்றிரவு 8 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்புகிறார். அவருக்கு விமான நிலையத்தில், மேள, தாளம் முழங்க தடபுடல் வரவேற்பளிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.