குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம்
2015, 2016, 2017 ஆம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம் வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்டு அந்தந்த ஆண்டுகளில் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட படங்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 3 மணி நேரத்திற்கு மிகாமலும் 90 நிமிடங்களுக்கு குறைவில்லாமலும், ஓடக்கூடிய அளவில் இந்தத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் இதற்கான விண்ணப்பங்களை கலைவாணர் அரங்கம் வளாகத்தில் இருக்கும் மாநில செய்தி நிலையத்தில் பெற்று, வரும் 29-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் திரைப்படங்களுக்கு தலா 7 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




