தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். திருப்பூர் மாவட்டம் அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மீண்டும் மழை பெய்ததால் நீர்நிலைகளில் குறிப்பிட்ட அளவு நீர்மட்டம் உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதேபோல் ஈரோடு விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் இன்றும் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






