ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் கண்டு தீண்டாமைக்கு எதிராகப் போராடியவர் இம்மானுவேல் சேகரன்; மு.க.ஸ்டாலின்

தி மு க தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இம்மானுவேல் சேகரன் 62வது நினைவு நாளை முன்னிட்டு, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது;ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் கண்ட இம்மானுவேல் சேகரன் அவர்களுடைய 62வது நினைவு நாள் இன்று. அவருடைய நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய அஞ்சலியை நான் செலுத்தியிருக்கிறேன்.

 

அதேபோல், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த முன்னோடிகள், தோழர்கள் அனைவரும், இன்று என்னோடு சேர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறோம்.‘தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்’ எனப் போராடியவர் இம்மானுவேல் சேகரன் அவர்கள். அவர் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.1950 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் என்ற இயக்கம் கண்டவர் இம்மானுவேல்.

அதேபோல், 1954-ல் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்தி, தீண்டாமைக்கு எதிராக வாதிட்டவர் – போரிட்டவர் இம்மானுவேல் அவர்கள் எனவே, அவருடைய புகழ் ஓங்கி நிலைத்திட வேண்டும் என்கிற உணர்வோடு தி.மு.கழகத்தின் சார்பில் எங்களுடைய அஞ்சலியை நாங்கள் செலுத்தியிருக்கிறோம்.இம்மானுவேல் அவர்களின் நினைவு நாள், அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.

தி.மு.க ஆட்சிக்கு வரும்போது அரசு விழாவாக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறதா?என கேள்வி எழுப்பகையில்
அரசுப் பொறுப்பில் இருக்கக்கூடியவர்களிடத்தில் கேட்க வேண்டிய கேள்வி இது!தி.மு.க ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையை, நீங்கள் கேட்கும் கேள்வியே எடுத்துக்காட்டுகிறது. அதற்காக மகிழ்ச்சியடைகிறேன்!
பிரதமர் மோடி ஆட்சியின் சாதனையைச் சொல்லவேண்டும் என்றால், இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சீர்குலைவைச் சொல்லலாம். ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாகக் குறைந்துள்ளதுதான் மிகப்பெரிய சாதனை இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.


Leave a Reply