கோவை கல்லூரி மாணவர்களின் ஓணம் கொண்டாட்டம் !!!

ஓணம் பண்டிகையை கோவை கல்லூரி மாணவர்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். வாமன அவதாரத்தில் உலகை அளந்த மகா விஷ்ணுவுக்கு கேரளத்தை ஆண்ட மாகாபலி சக்கரவர்த்தி தன் தலையை கொடுத்தார் என்பது புராண வரலாறு. பாதாளத்துக்கு சென்ற மகாபலி மன்னன், மகா விஷ்ணுவின் அருளால், ஆண்டுதோறும் சிங்க மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் தனது நாட்டு மக்களை காண வருவதாக ஐதீகம். அந்த நாளே ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகைக்கு 10நாட்களுக்கு முன்பே, கொண்டாட்டங்கள் தொடங்கி நடைபெறும்.

மகாபலி மன்னனை வரவேற்க, மக்கள் தங்களின் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, வீடுகளில் படையலிட்டு வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் கேரளா மாநில எல்லையில் அமைந்து உள்ள கோவை மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களாகவே ஓணம் பண்டிகை களைகட்ட துவங்கிவிட்டது. வீடுகளிலும், கல்லூரிகளிலும், கோவில்களிலும் அத்தப்பூ கோலமிட்டு, விஷூக்கனி படையலிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை அடுத்த தென்னம்பாளையத்தில் உள்ள கே.பி.ஆர். கல்லூரியில் மாணவ, மாணவிகள் ஓணம் பண்டிகையை கோலாகலமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடினர். மாணவர்கள் வேட்டி சட்டையிலும், மாணவிகள் கேரளாவின் பாரம்பரிய புடவையிலும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரி வளாகத்தில் நடனமாடியும், பாட்டு பாடியும் மகிழ்ந்தனர்.

 

பின்னர் செண்டை மேளம் இசைக்கப்பட்டு, அதன் இசைக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர். பின்னர்,அத்தப்பூ கோலமிட்டு ஒருவருக்கு ஒருவர் தங்களின் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர் மாணவ, மாணவிகள்.


Leave a Reply