தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான சிபிஐ மற்றும் விசாரணை ஆணையம் விசாரணை குறித்து இன்று தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த உத்தரவு வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி சிவஞானம்., பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அமைதியான முறையில்தான் போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
தமிழக அரசு எந்த முன்னறிவிப்புமின்றி தடை உத்தரவை பிறப்பித்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஐந்து பேர் பலியானதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் நீதிபதிகள் ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து தகவல் தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.