காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்தும், தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.
மெஹ்பூபா முஃப்தி மகள்இல்திஜா முஃப்தி எழுதியுள்ள அந்தக் கடிதத்தை ‘தி வையர்’வெளியிட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், ‘நான் ஏன் காவலில் வைக்கப் பட்டுள்ளேன் என்று சிறிது தெளிவு பெறுவதற்காக நான் எடுத்த பல முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் வேறு வழி இல்லாமல் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் என்னுடைய அடிப்படை உரிமைகள் குறித்து கேள்விகள் எழுப்பியதால் தண்டிக்கப் படவில்லை அல்லது கைது செய்யப்படவில்லை என்று நம்புகிறேன்.பிரார்த்திக்கிறேன்.
காஷ்மீர் கருமேகங்களால் சூழப்பட்டுள்ளது. பேசத் துணிந்தவர்கள் உட்பட அதன் மக்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளேன். ஆகஸ்டு 5 அன்று அரசியல் சட்டப் பிரிவு 370ஐ நீங்கள் ரத்து செய்த பிறகு காஷ்மீரிகளாகிய நாங்கள் விரக்தியில் சுழலுகிறோம். என் தாயும் முன்னாள் முதல்வருமான மெஹ்பூபா முஃப்தியும் பல மக்கள் பிரதிநிதிகளும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மக்களை முடக்கி வைக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தாங்கொணா துயரம் தரும் பத்து நாட்களாகி விட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கு அச்சத்தின் பிடியிலிருக்கிறது. ஏனெனில் அங்கு வாழும் மக்கள் அனைவரையும் தளரச் செய்யும் வகையில் தகவல் தொடர்புக்கான அனைத்து வடிவங்களும் முடக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பிற பகுதிகள் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த நாளில், காஷ்மீரின் மக்கள் அடிப்படையான மனித உரிமைகள் மறுக்கப்பட்டு விலங்குகள் போல் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளனர். துரதிருஷ்டவசமாக, உங்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காக நானும் என் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன். ஆனால் இங்கிருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் நான் இணையதள ஊடகங்களுக்கும், செய்தித் தாள்களுக்கும் கொடுத்துள்ள பேட்டிகள்தான் நான் காவலில் வைக்கப் படுவதற்கான காரணம் என்று சொல்கின்றனர். உண்மையில், நான் மீண்டும் பேசினால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப் பட்டுள்ளேன்.
அரசியல் சட்டத்துக்கு விரோதமாக அதன் 370வது பிரிவை ரத்து செய்தது, அதன் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது குறித்துத்தான் நான் திரும்பத் திரும்ப ஊடகங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதைக் குறிப்பிடுவது இங்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆகஸ்டு 5 முதல் காவலில் வைக்கப்பட்டுள்ள என் தாய் மற்றும் நூற்றுக்கணக்கான பிறரின் பாதுகாப்பு குறித்து என் கவலைகளியும் பேட்டிகளின் வெளிப்படுத்தி வருகிறேன்.குரல்கள் நசுக்கப்பட்ட காஷ்மீரிகளின் சார்பாக நான் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என்பது புரியவில்லை என்று உங்களுக்கு உரிய மரியாதையுடன் கேட்கிறேன்.
எங்களுக்கு இழைக்கப்படும் சித்திரவதை, அவமானம் அதனால் உண்டாகும் வலி குறித்து நான் கருத்துக்களை வெளியிடுவது குற்றமா?எங்களுடைய அவதியை விவரித்தால் அதற்கு வீட்டுக் காவல் என்பது சரியான எதிர் வினையா? நான் எந்தச் சட்டங்களின் அடிப்படையில் காவலில் வைக்கப்பட்டுள்ளேன், எவ்வளவு நாட்களுக்கு என்று நீங்கள் தெளிவுபடுத்தினால் நன்றியுள்ளவளாக இருப்பேன். நான் சட்ட உதவியை நாட வேண்டுமா? .
இப்படி என்னை நடத்துவது மூச்சுத் திணற வைக்கிறது. அவமானமாக இருக்கிறது. வயது முதிர்ந்த என் பாட்டி அவருடைய மகனைப் பார்ப்பதற்குக் கூட அனுமதி கோரி அதிகாரிகளிடம் மண்டியிட வேண்டியிருக்கிறது. அவரும் ஆபத்தானவர் என்று நினைக்கிறீர்களா?உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில், கற்பனைக்கும் எட்டாத அளவு ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஒரு குடிமகன் அதற்கு எதிராக குரலெழுப்பக் கூட உரிமை இல்லையா?
வாய்மையே வெல்லும் என்கிற வாசகம்தான் நம் நாட்டின் ஆன்மாவையும் அதன் அரசியலமைப்புச் சட்டத்தையும் வரையறுக்கிறது. ஒரு அசவுகரியமான உண்மையைப் பேசியதற்காக ஒரு போர்க் குற்றவாளியாக என்னை சித்தரிப்பது ஒரு துக்ககரமான முரண்நகை.
இந்தக் கடிதத்தை தபாலில் அனுப்பாததற்கு மன்னிக்கவும். ஜம்மு காஷ்மீரில் தபால் சேவைகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.வாய்மை வெல்லட்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.