துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு! தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்க கோரி காவல்துறை துப்புரவு பணியாளர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு, டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 2011 ம் ஆண்டு, அப்போதைய முதல்வர், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் கடந்த 2012 ம் ஆண்டு காவல்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் 1300 – 3000 ரூபாய் ஊதியத்தில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

 

காவல்துறையில் நியமிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்கள் 2018 ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். இதற்கிடையில் கல்விதுறையில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றிவர்களுக்கு உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கல்வித்துறை துப்புரவு பணியாளர்களுக்கு, 21,500 ரூபாயும், உயர் நீதிமன்ற துப்புரவு பணியாளர்களுக்கு 18, 843 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

 

மாதம், 5,730 ரூபாய் மட்டுமே ஊதியமாக பெறும் தங்களுக்கு, கல்வித்துறை பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி காவல்துறையில் துப்புரவு பணியாளராக பணியாற்றும் சசிகலா உள்ளிட்ட 30 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்த போது, ஊதிய உயர்வு வழங்கும்படி உயர் நீதுமன்றம் பிறப்பித்த உத்தரவு கல்வி துறைக்கு மட்டுமே பொருந்தும் எனக்கூறி, ஊதிய உயர்வு கோரிய மனுவை காவல்துறை நிராகரித்தது பாரபட்சமானது என மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

 

மேலும், ஒரே பணி ஒரே ஊதியம் என்ற அடிப்படையில் கல்வித்துறை துப்புரவு பணியாளர்களுக்கு இணையாக மனுதாரர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி-க்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 14 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Leave a Reply