கேரளாவில் கனமழையின் வெள்ளத்தால் 1 லட்சம் மக்கள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்

கேரளாவில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் மட்டும் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கடந்த இரு நாட்களில் வயநாட்டில் 9 பேர் இறந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 988 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 1 லட்சம் மக்கள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

 

கடுமையாக மழை பெய்து வரும் வயநாடு பகுதியில், 24,990 பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர்.கேரளா முழுவதும் கன மழை பெய்யும் என்று கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கடந்த நான்கு நாட்களாக கேரளாவில் தீவிரமடைந்து உள்ளது. அதேநேரம், இன்று முதல், அடுத்த ஐந்து நாட்களுக்கு படிப்படியாக, கேரளாவில் மழையின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 12ம் தேதி இல் வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்று அழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் அதன் தாக்கத்தால் மழை பிறகு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

 

ராகுல் காந்தி தனது லோக்சபா தொகுதியான வயநாட்டில் நாளை வெள்ள சேத பகுதிகளை பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வயநாடு சப் கலெக்டர் உமேஷ், கூறுகையில் “இப்பகுதி ஆபத்தான நிலையில் உள்ளது. 15 பேரை இன்னும் காணவில்லை. ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் நிலைகள் உயர்ந்து வருவதால், பனசுராசாகர் அணையின் மதகுகளை திறக்கும் வாய்ப்பு உள்ளது” என்றார்.


Leave a Reply