என் நெஞ்சில் சுடுங்கள், முதுகில் குத்தாதீர்கள்! பரூக் அப்துல்லா விமர்சனம்

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு முதுகில் குத்திவிட்டதாக முன்னாள் முதல்வரும் எம்பியுமான பரூக் அப்துல்லா கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவையில் பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன், தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா உள்ளிட்டோர் பரூக் அப்துல்லா குறித்து எவ்வித தகவலும் இல்லை எனக் கேள்வி எழுப்பினர்.

 

அதற்குப் பதிலளித்த அமித்ஷா, ‘பரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை. வீட்டுக் காவலிலும் வைக்கப்படவில்லை. அவரது வீட்டில் தான் இருக்கிறார். அவரது விருப்பப்படியே இருக்கிறார்’ என்று விளக்கம் அளித்தார். இந்நிலையில், பரூக் அப்துல்லா அப்போது மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். ‘என்னுடைய மாநிலம் எரிந்து கொண்டிருக்கும் போது, என்னுடைய மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நான் ஏன் வீட்டிற்கு சொந்த விருப்பப்படி இருக்க வேண்டும்.

 

மத்திய அரசு செய்தது ஜனநாயக விரோத நடவடிக்கை. வீட்டுச் சிறையில் நான் நேற்று இருந்தேன். எனது கதவுகள் மூடப்பட்டுள்ளன. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா பொய் சொல்கிறார். வேண்டும் என்றால் என் நெஞ்சில் சுடுங்கள். முதுகில் குத்தாதீர்கள். அமைதியான முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என நினைத்தோம். அவர்கள் கொன்றுவிட்டார்கள். ஜனநாயகம், மதச்சார்பற்ற இந்தியாதான் என்னுடைய இந்தியா’ என பரூக் அப்துல்லா சாடினார்.


Leave a Reply