கும்பகோணம் ஐயர் சிக்கன் விளம்பரத்திற்கு மன்னிப்பு கோரியது
மதுரையில் ஒரு உணவத்திற்கு ‘கும்பகோணம் ஐயர் சிக்கன்’ என்ற பெயரில் விளம்பரம் செய்த உணவகத்தை முற்றுகையிட்டு பிராமண சமுதாயத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு நிறுவனமும் ஏதாவது ஒரு வகையில் தங்களது நிறுவனத்தை வித்தியாசமாக விளம்பரம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் மதுரையில் ஒரு உணவக நிர்வாகம் தங்களது விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் வித்தியாசமாக விளம்பரப்படுத்துவதாக நினைத்து சர்ச்சைக்கு வித்திடும் வகையில் பெயரை தேர்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை வடக்கு மாசி வீதியில் மிளகு ஹோட்டல் என்ற அசைவ உணவகம் இயங்கி வருகிறது.
அந்த உணவகத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் ‘கும்பகோணம் ஐயர் சிக்கன்’ என்ற பெயரில் முகநூலில் விளம்பரப்படுத்தியது.இதை சமூகவலைதளங்களில் பார்த்த ஒருங்கிணைந்த பிராமணசமுதாயத்தினர் 50 க்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாக்குவாதமும் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த திலகர் திடல் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
உணவக நிர்வாக தரப்பில் மேலாளர் ராமநாதன் கும்பகோணம் ப்ரைடு சிக்கன் என்றுதான் டைப் செய்ய சொன்னதாகவும் ஆனால் கணிணி ஆப்பரேட்டர் தவறுதலாக கும்பகோணம் ஐயர் சிக்கன் என டைப் செய்துவிட்டதாகவும் கூறி தவறுக்கு மன்னிப்பு கோரினார். மேலும் முகநூலில் இருந்து சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




