ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம் இல்லை

ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என, ரயில்வே தெரிவித்துள்ளது.ரயில்வே சார்பில் சமீபத்தில், அதன் மண்டல அலுவலங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், ‘ரயில்வேயில், 55 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் 30 ஆண்டுக்கு மேல் பணியாற்றியுள்ள ஊழியர்கள் பற்றிய விபரங்களை அனுப்ப வேண்டும்’ என, கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

 

இதையடுத்து, 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டாய ஓய்வு அளிக்க, ரயில்வே முடிவு செய்துள்ளதாக, ஊழியர்களிடம் தகவல் பரவியது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊழியர்கள் விபரங்களை கேட்டுள்ளது, வழக்கமாக நடக்கும் பணி தான்.ஊழியர்கள் தேவை குறித்து அறியவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

 

இதற்கு முன்பும், விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. யாருக்கும், கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம் இல்லை. ரயில்வேயில், 2014 – 19ம் ஆண்டு வரை, 1 லட்சத்து, 84 ஆயிரத்து, 262 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சத்து, 83 ஆயிரத்து, 637 ஊழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1 லட்சத்து, 41 ஆயிரத்து, 60 பதவிகளுக்கு, தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply