8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது

8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் 10ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 277.3 கிலோமீட்டர் தொலைவுக்கு 8 வழிச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாய நிலம், காடுகள், நீர் நிலைகள் பாதிக்கப்படும் எனக் கூறி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

 

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 8ம் தேதி நிலம் கையகப்படுத்த தடை விதித்தது. இதனையடுத்து, சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி எட்டு வழிச் சாலை திட்ட செயல் இயக்குனர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. அதன்படி இருதரப்பு வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை தனது நிலைப்பாட்டினை தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.

 

மேலும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிப்பது தொடர்பாக இன்று முடிவு அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

 

அதன்படி இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த வழக்குவிசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து.


Leave a Reply