ரயில்வே கேட் சாலையை தடுப்பு சுவர் வைத்து மூடினால் 60 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே அதனை கைவிடக்கோரி கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூர் அருகே இலங்கியனூர் கிராம மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வனிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது இலங்கியனூர் நல்லூர் கண்டமும் குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். இவர்களில் பெண்கள் 8291 பேரும் ஆண்கள் 7540 பேரும் உள்ளனர் இதில் பெரும்பாலானோர் விவசாயக் குடும்பங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் விருத்தாசலம் – சேலம் ரயில்வே பாதையை உள்ளடக்கிய கேட் நம்பர் 73. 74 ஆகிய இரு சாலைகள் உள்ளன. இதில் கேட் நம்பர் 73 சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நல்லூர் ஊராட்சி ஒன்றியம் 64 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது இதில் 60 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்களும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்களும் சுத்துப்பட்டு கிராம விவசாயிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
5 ரில் விளையும் நெல், கம்பு, சோளம், கரும்பு அறுவடை செய்த விளை பொருட்களை விவசாயிகள் இந்த கேட் நம்பர் 73 சாலையின் வழியாகவே கொண்டுச் சென்று வருகின்றனர்.இதில் கேட் நம்பர் 73 சாலை போக்குவரத்து கிராம பொதுமக்கள் இந்த சாலையை சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாக பொது மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இலங்கியனூர்- நல்லூர் மணிமுத்தாற்றில் 13 கோடி செலவில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்தப் பாலம் மங்கலம்பேட்டை உளுந்தூர்பேட்டையை குறுகிய காலத்தில் சென்றடைய பயன்படுகிறது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்திற்கு செல்லும் முக்கிய சாலையாக கேட் நம்பர் 73 சாலை உள்ளது. இந்நிலையில் கேட் நம்பர் 74 சாலையில் சுரங்கப்பாதை அமைத்து கேட் நம்பர் 73 சாலையை தடுப்பு சுவர்வைத்து மூடிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் 60 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள் பள்ளி மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேட் நம்பர் 74 ல் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப்பாதை உயரம் குறைவாக அமைக்கப்பட்டுள்ளதால் இதன் வழியாக பள்ளி பேருந்துகள், நெல் அறுக்கும் இயந்திரங்கள், கரும்பு லோடுகள், நெல் மூட்டை உள்ளிட்ட விவசாய பொருட்களை ஏற்றி செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து தொடர இயலாமல் உள்ளது.
இதற்கிடையில் கேட் நம்பர் 73 சாலையை தடுப்பு சுவர் அமைத்து மூடிவிடும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சாலை இதுவரை ஊராட்சி சாலை அமைந்திருந்தது இச்சாலையின் போக்குவரத்தின் முக்கியம் கருதி நெடுஞ்சாலை துறையின் கீழ் சாலை பணி விரிவாக்கம் செய்ய அரசு உத்தரவு போட்டுள்ளது, மேலும் வரும்காலத்தில் இந்த இடத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில் இந்த சாலையை தடுப்பு சுவர் வைத்து மூடினால் 60 கிராம மக்களும் மாணவர்களும் குறிப்பாக விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே மக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கையை கைவிட்டு ரயில்வே கேட் கீப்பர் போட்டு வழக்கம் போல இந்த கேட் நம்பர் 73 சாலையில் போக்குவரத்து தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று இலங்கியனூர் ஐவதுக்குடி, கொளப்பாக்கம், வலசை, எறஞ்சி, வண்ணாத்துார் 20க்கும் மேற்பட்ட கிராம ஓர் முக்கிய முக்கியஸ்தர்கள் பாஸ்கரன் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.