கோவையில் 30 ரேப்பிடோ டூவீலர் டாக்ஸிகள் சிறைபிடிப்பு

கோவையில் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் இணைந்து உரிய அனுமதியின்றி இயங்கி வந்த சுமார் 30 டூவீலர் டாக்ஸிகளை சிறைப்பிடித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.கோவையில் செயல்பட்டு வரும் ரேப்பிடோ டூவீலர் டாக்ஸி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

அதே வேளையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் கால் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான வருமானம் முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டதாக அனைத்து கால் டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும்,இருசக்கர வாகனத்தில் சுற்றுலா உரிமத்தில் வாடகைக்கு ஓட்டக்கூடாது என்ற விதியும் உள்ள நிலையில் கோவையில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டூவீலர்கள் ரேப்பிடோ நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

 

அவ்வப்போது உரிய அனுமதியில்லை என கூறி கால் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அதுபோன்று இயங்கும் வாகனங்களை பிடித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தும் இதுவரை அந்நிறுவனம் மீது வட்டார போக்குவரத்து துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு ரேப்பிடோ நிறுவனத்திற்கு எதிராக உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இன்றும் பல இடங்களில் ரேப்பிடோ நிறுவனம் சார்பில் டூவீலர் டாக்ஸிகள் இயங்கியதால் தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஓட்டுநர்கள் ஆங்காங்கே இயங்கிய சுமார் 30 இருசக்கர வாகனங்களை பிடித்து கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

 

அப்போது,கால் டாக்ஸிகளுக்கான சுற்றுலா வாகன உரிமம் இருசக்கர வாகனத்திற்கு இல்லாமலேயே போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக ரேப்பிடோ நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கால் டாக்ஸி உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.


Leave a Reply