கோவை மாவட்டம் சூலூர் அருகே 360 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ஆச்சான் குளம். சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த குளம் இருந்து வருகின்றது.இந்த குளத்தை தூர்வார வேண்டும் என்பது சூலூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது.இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆச்சான் குளம் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என பி.ஆர்.நடராஜன் வாக்குறுதியளித்து இருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பி.ஆர்.நடராஜன் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகஆச்சான் குளத்தை தூர்வார தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 75 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.இதனையடுத்து இன்று ஆச்சான்குளம் தூர்வாரும் நிகழ்ச்சியானது எளிமையாக குளத்தின் அருகே மரத்தடியில் நடத்தப்பட்டது.
இந்த துவக்க விழா நிகழ்வில் சூலூர் பகுதி விவசாயிகள் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன், பா.ஜ.க விவசாய அணி துணைத்தலைவர் ஜி.கே.நாகராஜ் உட்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.விவசாயிகள் மத்தியில் பேசிய பி.ஆர்.நடராஜன், விவசாயிகள்,சமூக ஆர்வலர் கொண்ட குழுவை அமைத்து இந்த தூர்வாறும் பணியை கண்காணிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ஆச்சான் குளம் தூர்வாறும் பணியினை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். இதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன்,மாவட்ட ஆட்சியர்,சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த தூர்வாறும் பணியை செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திட்டமிட்டதாகவும், ஆனால்,அவசர அவசரமாக அமைச்சர் தலைமையில் யாரையும் அரவணைக்காமல் தனியாக தூர்வார பூமி பூஜை போடப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
தொகுதி எம்.பியை அழைக்காமல் அவசரம் அவசரமாக அமைச்சர் தலைமையில் பூமி பூஜை செய்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.இருந்தாலும் மக்களின் நீண்டகால கோரிக்கையான ஆச்சான் குளம் தூர்வாரப்படுவது மகிழ்ச்சிதான் என கூறிய அவர், அரசு நடத்திய தூர்வாரும் நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினரை அழைக்காதது தவறான நடவடிக்கை எனவும் தெரிவித்தார்.
மேலும்,அரசு குடிமராமரத்து பணிகளை முறையாக செய்கின்றதா என்ன சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர்,அரசு குடிமராமரத்து நடைபெற்ற இடங்கள் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த தூர்வாறும் நிகழ்ச்சியில் கட்சி வேறுபாடுகளை கடந்து அனைத்து கட்சியினரும் ஓன்று சேர்ந்து இந்த பணிகளை முன்னெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி எம்.பி என்ற முறையிலாவது பூமி பூஜைக்கு அழைத்திருக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கருத்தாக உள்ளது.