எஞ்சினியரிங் படிப்புக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முடிந்தும் இன்னும் 85 சதவீத இடங்கள் நிரம்பாமல், காலியாக உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் பெருமளவில் குறைந்து காணப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் பொறியியல் படிப்பில் காலியிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு ஆண்டு தமிழகத்தில் பொறியியல் கவுன்சிலிங் முடிந்தும் சுமார் 90 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது தற்போது பொறியியல் படிப்பிற்கான முதற்கட்ட கவுன்சிலிங்கில் 6,740 இடங்களும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 14,792 இடங்களும் மட்டுமே நிரம்பியுள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஒருசில தனியார் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்திற்கும் மேல் இடங்கள் நிரம்பியுள்ளன.அரசு கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் 3,820. இரண்டாவது கட்ட கவுன்சிலிங்கின் முடிவில் 2,398 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள கல்வியாளர்கள், ஆட்டோ டிரைவராக பொறியியல் பட்டதாரிகள் உள்ளனர்.
கான்ஸ்டபிள் பதவிக்கு ஒரு பொறியியல் கல்லூரி பட்டதாரி கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார்.இந்த சம்பவத்தையெல்லாம் பெரிதுபடுத்தி பேசும் போது இயல்பாக கிராமப்புற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், பொறியியல் படிப்புகளில் சேர்ப்பதற்கு முன்வருதில்லை என கூறுகின்றனர்.
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மொத்தமுள்ள 2,163 இடங்களில் 2,106 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,51,574 இடங்களில் 13,379 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.