கல்லூரி வாசலில் மாணவியை கடத்த முயற்சி!மாணவி கொடுத்த புகாரின் பேரில் இருவர் கைது

கோவை அருகே கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வாசலில் கல்லூரி மாணவியை காரில் கடத்த முயன்றதாக கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் இருவரை கருமத்தம்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரின் 21 வயது மகள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் ஓடக்காடு பகுதியை சேர்ந்த அழகர் என்பவரின் மகன் ரஞ்சித் குமார் (26) என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் நேற்று காலை கல்லூரி வாசலில் கல்லூரிப் பேருந்தில் இருந்து இறங்கிய கல்லூரி மாணவியை முன்னதாகவே வந்து நின்று கொண்டிருந்த ரஞ்சித்குமார் மற்றும் அவரது நண்பர் அப்துல் ரகுமான் ஆகியோர் அம்மாணவியை அழைத்துள்ளனர். அப்பொழுது, அம்மாணவி அவர்களை கண்டுகொள்ளாமல் சென்றுள்ளார்.மேலும், ரஞ்சித் குமார் அம்மாணவியின் கையை பிடித்து இழுத்து காரில் ஏறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.அப்பொழுது அம்மாணவி காரில் ஏற மறுத்ததால் ரஞ்சித் குமார் அம்மாணவியை காரை ஏற்றிக் கொன்றுவிடுவதாக மிரட்டி கன்னத்தில் அறைந்துள்ளார்.

 


அப்பொழுது தயாராக நின்று கொண்டிருந்த ரஞ்சித் குமார் நண்பர் அப்துல் ரகுமான் கல்லூரி மாணவியை காருக்குள் தள்ளிவிட ரஞ்சித் குமார் காருக்குள் இருந்த கல்லூரி மாணவியை பிடித்துக் கொண்டார். மேலும்,ரஞ்சித் குமார் தனது மொபைலில் ஆபாச நிலையில் இருந்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை காட்டி தன்னை திருமணம் செய்யவில்லை எனில் இதேபோல் பல ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். அதை தொடர்ந்து அப்துல் ரகுமான் காரை சில அடி தூரம் இயக்கிய நிலையில் உடனடியாக அப்பகுதியில் இருந்த சக கல்லூரி மாணவர்கள் உடனடியாக காரை தடுத்து நிறுத்தி மாணவியை மீட்டுள்ளனர்.

 

அதைத்தொடர்ந்து கல்லூரி மாணவி கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் ரஞ்சித் குமார் மற்றும் அவரது நண்பர் அப்துல் ரகுமான் ஆகியோர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கிழ் வழக்கு பதிவு செய்தனர் மேலும் ரஞ்சித்குமார்,அப்துல் ரகுமான் ஆகிய இருவரையும் கைது செய்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் கல்லூரி வாசலில் கல்லூரி மாணவியை கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply