உணவுப்பொருட்கள் குறித்த விழிப்புணவும், இயற்கை வேளாண்மைக்கான வரவேற்பும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இயற்கை வேளாண்மையை முறைப்படுத்தவும், அதனை அறிவியல் பூர்வமாக அனுகவும் எவ்வாறான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் கோவையில் இஸ்காப் என்ற வேளாண் அமைப்பு மற்றும் கிருஷ்ணமூர்த்தி சர்வதேச வேளாண் மேம்பாட்டு மையம் ஆகியவற்றின் சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் வேளாண் விஞ்ஞானிகள்,வேளாண் உற்பத்தியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும், இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, விவசாயிகளுக்கு நிலையான வருமானம் வருவதற்கான நடவடிக்கைகள் தேவை எனவும், நாட்டின் வளர்ச்சிக்கு அதிகமான அறிவியல் விஞ்ஞானிகள் தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.விவசாய பழ்கலைக்கழகங்கள் முயற்சியால் உணவு உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும்,அதே வேளையில் மக்கள் தொகைப்பெருக்கத்தின் காரணமாக உணவுத்தேவையை பூர்த்தி செய்வது பெரும் சவாலான விஷயமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,சந்தையில் மக்களுக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும்,
இயற்கை விவசாயம் இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாததாக இருப்பதாகவும் கூறினார்.தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் இயற்கை வேளாண்மை பரப்பளவை பெருக்குவது,நிலத்தடி நீர் செரிவூட்டல்,கழிவு நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட நான்கு தலைப்புகளின் கீழ் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.