உன்னிசெடிகளில் யானை பொம்மைகள்.. பழங்குடி மக்களின் கைவண்ணம்

வனப்பகுதிகளில் வளர்ந்து இருக்கும் களைசெடிகளான உன்னி செடிகளை முற்றிலும் அழிப்பதற்கான தீர்வு இன்னும் எட்டப்படாத நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உன்னி செடிகளை கொண்டு அழகிய யானை வடிவங்களை உருவாக்கி மனம் கவருகின்றனர் பழங்குடி மக்கள். வனங்களில் காணப்படும் களைசெடிகளான உன்னி செடிகளை அழிப்பதற்கான புதிய முயற்சியை எடுத்துள்ள கூடலூரை சேர்ந்த தனியார் அமைப்பினர் உள்ளூர் பழங்குடி மக்கள் உதவியுடன் அதனை செயல்படுத்தி வருகின்றனர்.

 

கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்படும் உன்னி செடிகளின் குச்சிகளை கொதிக்கும் தண்ணீரில் சுமார் 4 மணி நேரம் ஊறவைத்து, அதன் தோல் சீவி எடுத்து, காயவைக்கப்படுகின்றன. பின்னர் காய்ந்த உன்னி குச்சிகளை இரும்பு கம்பிகளால் வடிவமைத்து யானை உருவத்தின் மீது பொருத்தி யானை பொம்மையாக அதனை செய்து எடுக்கிறார்கள். இந்த யானை பொம்மைகள் பார்ப்பதற்கு உயிருள்ள யானைகளை போலவே காட்சியளிக்கின்றன. தற்சமயம் லண்டன் மற்றும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கண்காட்சிக்காக 100 யானை பொம்மைகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

30 க்கும் மேற்பட்ட யானை பொம்மைகள் செய்து முடிக்கப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில் மீதமுள்ள யானை பொம்மைகளை செய்யும் பணிகளை பழங்குடியின மக்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். களையாக வனத்தை வீணாக்கும் உன்னி செடிகளை வெட்டி, பழங்குடி மக்களுக்கு இது போன்ற வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்கிறார்கள் தன்னார்வலர்கள்.


Leave a Reply