வேலூர் தொகுதிக்கான மக்களவை தேர்தலை ரத்து செய்ய காரணம்

வேலூர் தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ரத்து செய்யபட்டதற்கான காரணம் என்ன? இந்த ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவிருந்த வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் அதன் கூட்டணி கட்சியான புதியநீதி கட்சியின் தலைவர் சி.சண்முகம் ஆகியோரும் போட்டியிட்டனர்.

 

இந்நிலையில் கடந்த மார்ச் 29 மற்றும் 30 ஆம் தேதி திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, கதிர் ஆனந்த்க்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்களும் , 10 லட்சம் ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து துரைமுருகனுக்கு நெருக்கமானவர் என கூறப்படும் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்திலிருந்து சுமார் 11 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

இந்த சூழ்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தலை ரத்து செய்ய கோரி தேர்தல் ஆணையம் தரப்பில் குடியரசு தலைவருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. அதனை ஏற்ற குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேர்தலை ரத்து செய்ய ஒப்புதல் அளித்தார். குறிப்பிட்ட வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சட்டவிரோதசெயலில் ஈடுபட்டதால் தேர்தலை ரத்து செய்ததாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Leave a Reply