தமிழகத்தில் இன்று வணிகர் தினவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளன. பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில், ஆண்டு தோறும், மே 5ஆம் தேதி வணிகர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டிற்கான மாநாடு, பேரணி ஆகியன இன்று, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடைபெறுகிறது.
இம்மாநாட்டிற்கு பேரமைப்பின் மாநிலத் தலைவரும், தேசிய முதன்மை துணைத் தலைவருமான ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தாங்குகிறார். அதேபோல் வணிகர் சங்க பேரவை சார்பில், சுதேசி பொருளாதார பிரகடன மாநாடு தூத்துக்குடியில் இன்று நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி ‘நிலா ஸீ புட்ஸ்’ வளாகத்தில் பிரமாண்ட மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்க பேரவைத் தலைவர் த. வெள்ளையன் தெரிவித்துள்ளார். இதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் இன்று கடைகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டல்கள், கடைகள், மெஸ் போன்றவை மூடப்பட்டுள்ளதால், உணவுக்கு அவற்றை மட்டுமே நம்பி இருப்பவர்கள், திண்டாட்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.