நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு! மாணவர்களே இதை மறந்துடாதீங்க!

நடப்பு ஆண்டுக்கான நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு, இன்று மதியம் நடைபெறுகிறது. மாணவ, மாணவியர் எதை எடுத்து செல்லலாம்; எடுத்துச் செல்லக்கூடாது என்ற பல கட்டுப்பாடுகளை தேர்வு முகமை விதித்துள்ளது.

 

எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2019-20-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) நாடு முழுவதும் இன்று பிற்பகல் 2;00 மணிக்கு துவங்கி, மாலை 5:00 மணி வரை நடக்கிறது.

 

இத்தேர்வுக்கு, தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும் சுமார் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 154 நகரங்களில், இத்தேர்வு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, கரூர், தஞ்சாவூர், நெல்லை, திருச்சி, சேலம், நாமக்கல் உள்பட 14 நகரங்களில், நீட் தேர்வு நடைபெறுகிறது.

 

தமிழ், ஆங்கிலம் உட்பட 11 இந்திய மொழிகளில், இத்தேர்வை எழுதலாம். நாளை மதியம் 2:00 மணிக்கு தேர்வு தொடங்கினாலும், 1:15க்குள் மையத்திற்குள் வர வேண்டும். 1.30 மணிக்கு வந்தாலும் அனுமதி இல்லை. பிற்பகல் 1.45 மணிக்கு விடைத்தாள் வழங்கப்படும்.

 

ஜாமெட்ரி பாக்ஸ், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் கவர், கால்குலேட்டர், பேனா, ஸ்கேல், எழுத பயன்படுத்தும் அட்டை, பென்டிரைவ், ரப்பர், எலக்ட்ரானிக் பேனா, செல்போன், புளூடூத், ஹெட்போன், மைக்ரோபோன், பேஜர், ஹெல்த் பேண்ட் ஆகியவை கொண்டு செல்லக்கூடாது. தேர்வு எழுத பால்பாயிண்ட் பேனா தேர்வு மையத்திலேயே வழங்கப்படும்.

 

அதேபோல், பர்ஸ், கண்ணாடி, கைப்பை, பெல்ட், தொப்பி, வாட்ச், கை அணிகலன், கேமரா, அணிகலன்கள், சாப்பிடும் உணவுகள், வாட்டர் பாட்டில்களுக்கு மையத்தினுள் அனுமதி கிடையாது.

 

வெளிர் நிறத்திலான அரைக்கை ஆடைகள் அணிந்து வர வேண்டும். முழுக்கை ஆடைகள் அணிந்து வரக்கூடாது. கலாசாரம் மற்றும் நம்பிக்கை சார்ந்த ஆடைகளை அணிந்து வருபவர்கள் தேர்வு மையத்துக்குள் பிற்பகல் 12.30 மணிக்குள் வந்து, அதுபற்றி தெரிவிக்க வேண்டும். ஷூக்கள் அணிந்து வரக்கூடாது.

 

மாணவர்கள் முழுகை சட்டை அணியக் கூடாது. மாணவிகள் தலையில் கிளிப், மூக்குத்தி , காதுவளையம் அணியக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply