தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை; குற்றவாளிகளை அதிமுக அரசு பாதுகாக்கிறது என்று, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பிரசாரம் செய்தார்.
சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், காடுவெட்டி பாளையாம், கிட்டாம்பாளையம், குளத்துபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்தார்.
பிரசாரத்தில் பேசிய ஈஸ்வரன், அதிமுக ஆட்சி, குற்றவாளிகளை பாதுகாக்கக் கூடிய ஆட்சியாக உள்ளது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை, இந்த அரசு பாதுகாக்கிறது.
சுதந்திர இந்தியாவில் பட்டபகலில் 12 மணிக்கு கூட பெண்கள் நடமாட முடியவில்லை. ஈரோடு, பெரம்பலூரில் நடைபெற்ற சம்பவங்களும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததையே காட்டுகின்றது.
அதிமுகவினரும், பாஜகவினரும் கொள்ளையடிப்பதற்கு, தமிழக மக்கள் ஓட்டு போடவேண்டும் என்று தலையெழுத்தா. கடந்த 8 ஆண்டுகளாக தமிழக மக்கள் பட்ட கஷ்டங்கள் போதும், இனியும் ஏமாந்தது போதும் என்று பேசினார்.
வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி பேசுகையில் “ஜிஎஸ்டி வரி உயர்வால் அனைத்து பொருட்களின் வரிகளும் உயர்ந்து விட்டன. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்து அனைத்து தரப்பு மக்களும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த நிலை மாற, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக்க வேண்டும் ” என்றார்.
பிரச்சாரத்தின்போது, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமசந்திரன், காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி.மனோகரன், திமுக ஒன்றிய செயலாளர் ராஜன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் பிரிமியர் செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.