“வீடியோ கேமில் தாக்குதல் நடத்தியிருப்பார்கள்”! துல்லிய தாக்குதல் பற்றி காங்கிரஸை கலாய்த்த மோடி!

காங்கிரஸ் ஆட்சியில் வீடியோ கேமிலோ அல்லது காகிதத்திலோ தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் என்று, பிரதமர் நரேந்திர மோடி கிண்டல் செய்துள்ளார்.

 

காங்கிரஸ் ஆட்சி காலத்தில், தீவிரவாத நிலைகள் மீது ஆறு முறை துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறியிருந்தார். இதற்கு, ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

 

அவர் பேசியதாவது: பா.ஜ.க. ஆட்சியில் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டபோது, அதை காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர். பிறகு கேலி செய்தனர். ஆனால், நாங்களும் தாக்குதல் நடத்தினோம் என்று இப்போது கூறுகிறார்கள். அதிலும் பொய்யாக புளுகுகிறார்கள்.

 

ஒரு காங்கிரஸ் தலைவர், தங்களது ஆட்சியில், மூன்று முறை துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக நான்கு மாதங்களுக்கு முன்பு கூறினார். இப்போது, மற்றொரு தலைவர் ஆறு முறை துல்லிய தாக்குதல் நடந்தது என்கிறார். தேர்தல் முடிவதற்குள், இந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்தாலும் ஆச்சரியமில்லை.

 

இந்த தலைவர்கள், வீடியோ கேம் விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அதில், துல்லிய தாக்குதலை ரசித்து, அதை நிஜம் என்று கருதி விட்டார்கள் போலும். ஒருவேளை காகிதத்தில் தாக்கி இருக்கலாம். ராணுவ தளபதியை ‘குண்டர்’ என்றும், விமானப்படை தளபதியை ‘பொய்யர்’ என்றும் சொன்னவர்கள்தான், காங்கிரஸ் தலைவர்கள். இவ்வாறு மோடி பேசினார்.


Leave a Reply