என் தந்தையின் மரணத்தில் ‘அந்த இருவர்’ மீது சந்தேகம்! மார்ட்டின் நிறுவன காசாளர் பழனி மகன் பகீர் தகவல்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Special Arrangements


தமது தந்தையின் மர்ம மரணத்தில், நிறுவனத்தில் பணி புரியும் இரண்டு பேர் மீது தமக்கு சந்தேகம் உள்ளதாக, மார்ட்டின் நிறுவன காசாளர் பழனியின் மகன் ரோகின் குமார் தெரிவித்துள்ளார்.

 

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில் பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

மர்மமான முறையில் இறந்த காசாளர் பழனிச்சாமி

 

மார்ட்டீனின் கோவை வெள்ளக்கிணறு வீட்டில், ரகசிய அறை ஒன்றில் இருந்து கட்டுக்கட்டாக பணம், படிக்கட்டுகள் மற்றும் கூரையில் மேற்பகுதிகளில் பதுக்கப்பட்டிருந்த 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

இதற்கிடையே, வருமான வரித்துறை விசாரணைக்கு சென்று வந்த, மார்ட்டின் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த காசாளர் பழனிச்சாமி, மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை வெள்ளியங்காடு குளத்தில், சடலமாக மீட்கப்பட்டார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை, கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

கோவையில் உள்ள மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்களில் ஒன்று.

 

இன்று பழனிச்சாமியின் உடலை, பிரேதப் பரிசோதனைக்காக கோவைக்கு கொண்டு செல்ல போலீசார் முயற்சி மேற்கொண்டனர். அப்போது கொலை வழக்காக பதிவு செய்த பிறகு தான் பிரேதப்பரிசோதனை செய்யவேண்டும் என வலியுறுத்தி, பழனிச்சாமியின் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில், பழனிச்சாமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது மகன் ரோகின் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனது தந்தைக்கு பல்வேறு இடங்களில் இருந்து நெருக்கடிகள் அளிக்கப்பட்டது. எனது தந்தையின் மரணம் பற்றி நீதிபதி முன் விசாரணை நடத்த வேண்டும்.

 

எனது தந்தை மரணத்தில் மார்ட்டின் நிறுவனத்தில் வேலை செய்யும் 2 பேர் மீது சந்தேகம் உள்ளது. அவர்களின் பெயரை வெளிப்படையாக இப்போது கூற முடியாது. தந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

 

எனது தந்தையை தலையில் தாக்கி கொலை செய்துள்ளனர்; அவரது முகத்தில் காயங்கள் இருந்துள்ளன. அதேபோல், வருமானவரித்துறையினரும், விசாரணையின்போது எனது தந்தையை துன்புறுத்தியுள்ளனர். தந்தையை தலையில் தாக்கி கொலை செய்துள்ளனர்; அவரது முகத்தில் காயங்கள் இருந்தன என்று அவர் கூறினார்.

 

இது, பழனியின் மர்ம மரணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே, காசளர் பழனி மரணம் தொடர்பாக, வருமான வரித்துறையினர் மீது, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.