ரூ.5 கோடி நகைகளுடன் மாயமான வங்கி ஊழியர்! மர்மமான முறையில் சடலமாக கண்டெடுப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Special Arrangements


புதுக்கோட்டையில், ரூ.5 கோடி நகைகளுடன் காணாமல் போயிருந்த வங்கி ஊழியர், மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

புதுக்கோட்டை ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக பணி புரிந்து வந்தவர் மாரிமுத்து. திருக்கட்டளை பகுதியை சேர்ந்த இவர், 15 ஆண்டுகளாக பணியாற்றி பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணி புரிந்து வந்தார். தனது மனைவி ராணி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன், புதுக்கோட்டையில், வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

 

கடந்த 22 ஆம் தேதி, தனது வீட்டில் இருந்து காரில் சென்ற மாரிமுத்து, திரும்பி வரவில்லை. இதுகுறித்து, மனைவி ராணி புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதற்கிடையே வங்கியில் இருந்து ரூ. 5 கோடி மதிப்புள்ள நகைகள் காணவில்லை என்ற தகவலும் வெளியானது.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவின் கார், வல்லத்திராக்கோட்டை காட்டில் எரிந்த நிலையில் கிடந்தது. அதில் கவரிங் வளையல்கள் மற்றும் ஒரு ஹார்ட் டிஸ்க் இருந்தன. இதுபற்றி, வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதற்கிடையே, காணாமல்போன மாரிமுத்துவின் உடல், மணல்மேல்குடியில் போலீசார் கண்டுபிடித்தனர். அதை, அவரது மனைவி ராணி அடையாளம் காட்டினார். வங்கியில் ரூ. 5 கோடி நகைகள் மாயமான அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், வங்கி ஊழியர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டது, புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply