இலங்கையை சேர்ந்த ஒருவர் சென்னையில் சுற்றிவளைப்பு! தொடர் குண்டு வெடிப்பில் தொடர்பா என விசாரணை

சென்னையில் நேற்றிரவு, இலங்கையை சேர்ந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடக்கிறது.

 

அண்டை நாடான இலங்கையில் கடந்த மாதம் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 253 பேர் இறந்தனர்; 500-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

 

இலங்கைக்கு அருகேயுள்ள தமிழகத்தில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த யாரேனும் தங்கியுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணையும், கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

 

இலங்கை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவரின் நண்பர் ஹசன் என்பவர் சென்னை மண்ணடிக்கு வந்து சென்றதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பினரும், கியூ பிரிவு போலீசாரும் இணைந்து நேற்றிரவு, சென்னை பூந்தமல்லியில் உள்ள கோல்டன் அபார்ட்மெண்ட்டில் ரகசியமாக தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 3 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

 

விசாரணை முடிவில், பூந்தமல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்ததாக, இலங்கை தானுகா ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடக்கிறது.


Leave a Reply