தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது; இது மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஃபனி புயல், தமிழகம் நோக்கி வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, அது திசை மாறிச் சென்று, ஒடிசாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வரும் 3ஆம் தேதி ஒடிசா கடலோரப் பகுதியில் அது கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக வட தமிழக மாவட்டங்களில், வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீசி வருகிறது. சில இடங்களில் சிறிய மரக்கிளைகள் முறியும் வண்ணம், காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ஃபனி புயலின் காரணமாகவே, தற்போது தமிழகத்தில், குறிப்பாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
ஓரிரு நாட்களுக்கு இது தொடரும். மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே அதற்கேற்ப முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது.