ஈ.பி.எஸ். தரப்புக்கு இரட்டை இலை சின்னமா? எதிர்த்து சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல்

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து, சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிமுக தற்போது இயங்கி வருகிறது. அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதேர்தல் ஆணைய உத்தரவிட்டிருந்தது.

 

இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பு மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

அதில், ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னம் மற்றும் அ.இ.அ.தி.மு.க. பெயரை அனுமதித்த தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் சசிகலா, டி.டி.வி.தினகரன் அணியினருக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

 

ஆனால், சின்னம் ஒதுக்க கோரிய தினகரனின் வழக்கின் போது இரட்டை இலை கோரிக்கை தொடர்பான வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ். தரப்புக்கு ஒதுக்கப்பட்டது.

 

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ், மற்றும் இ.பி.எஸ். தரப்புக்கு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply