மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரான மு.க. அழகிரி, தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அரசியலில் ஆர்வம் காட்டாமல் உள்ளார். இந்த சூழலில், அவரது மகன் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இதுகுறித்து அமலாக்க துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது: அதில் கூறியிருப்பதாவது:
தயாநிதி அழகிரியின் ஒலிம்பஸ் கிரானைட்ஸ் தனியார் நிறுவனத்திற்கு உரிய மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலம், கட்டிடங்கள் மற்றும் தொகைகள் என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகள், பணமோசடி தடுப்பு சட்டம் – 2002ன் கீழ் முடக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத முறையில் இந்த சொத்துகள் ஈட்டப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் நிறுவனத்தின் பங்குதாரர்களான எஸ். நாகராஜன் மற்றும் தயாநிதி அழகிரி உள்ளிட்டவர்கள், சட்டவிரோத முறையில் குத்தகை நிலத்தில் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு பலன் பெற்று, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.