பல உயிர்களை காவு வாங்கிய இலங்கை தொடர்பு குண்டு வெடிப்புகளில் இருந்து, திருப்பூர் முன்னாள் மேயரும், திமுக முக்கிய பிரமுகருமான செல்வராஜ் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இலங்கையில் நேற்று முன் தினம் காலை தேவாலயங்கள், ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில், வங்கதேச பிரதமரின் பேரன் உட்பட, அப்பாவி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; 500 பேர் வரை படுகாயம் அடைந்தனர். உலகையே அதிரவைத்த இச்சம்பவத்தில் இந்தியா, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில், திருப்பூர் முன்னாள் மேயரும், மாவட்ட திமுக நிர்வாகியுமான செல்வராஜ், நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஓட்டலின் 7ஆவது மாடியில் தங்கியிருந்த அவர், கண் இமைக்கும் நேரத்தில், பயங்கர குண்டு வெடிப்பில் இருந்து தப்பிய தனது அனுபவத்தை, அதிர்ச்சியுடன் நமது குற்றமே இதழின் சிறப்பு நிருபருக்கு தொலைபேசி வாயிலாக விவரித்தார்.
அவர் அளித்த சிறப்பு பேட்டி:-
குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது நான் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்தேன். நான் தங்கியிருந்த ஈஸ்வரி ஓட்டலின் டைனிங் ஹாலில் குண்டு வெடித்த போது, 7ஆவது மாடியில் இருந்தேன். என்னுடன் வந்திருந்த திமுக வர்த்தக அணியின் ராஜ்மோகன் குமார் உள்ளிட்ட இருவருக்காக காத்திருந்தேன்.
அவர்கள் மட்டுமின்றி, ராமதாஸ், திமுக மாநகர பொருளாளர் முத்துகிருஷ்ணன், ஆறாவது வார்டு செயலாளர் மணி உள்பட மொத்தம் ஆறு பேர் இருந்தனர். டைனிங் ஹால் செல்ல தயாராக இருந்த போது, காலை 8.45 மணியளவில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
முதலில் சுனாமியாக இருக்குமோ என்று நினைத்தோம். பிறகு தான் குண்டுவெடித்தது என்று தெரிந்தது. எங்களுடன் இருந்த மற்றவர்கள் எல்லாம் பீதியடைந்து நாலாபுறமும் ஓடினர். நாங்களும் பதற்றமாக இருந்தோம்; பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டோம். திரும்பிய பக்கமெல்லாம் அழுகுரல், மரண ஓலங்களாக இருந்தன.
வேறு ஓட்டலுக்கு தங்க சென்ற போது, பதற்றமான சூழலை காரணம் காட்டி இடம் தர மறுத்தனர். பின்னர் நண்பர்களின் உதவியோடு, தாஜ் ஓட்டலில் இடம் கிடைத்தது.
நூலிழையில் உயிர் தப்பியதை நினைத்தால் இப்போதும் அந்த காட்சிகள் கண் முன்னே வந்து செல்கிறது. இங்கு இன்னமும் பதற்றம் தணியவில்லை. நாங்கள் நாளை (23ஆம் தேதி ) காலை கிளம்பி, மதியம் 1 மணிக்கு விமானத்தில் தமிழ்நாடு திரும்புகிறேம். எங்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இலங்கை குண்டு வெடிப்பில், தமிழகத்தை சேர்ந்த அதுவும் திருப்பூர் மாநகர திமுக முக்கிய நிர்வாகிகள் அதிர்ஷ்டவசமாக தப்பியது, அவர்களது உறவினர்களையும், திருப்பூர் மக்களையும் நிம்மதியடைய செய்துள்ளது.