வாகனங்களில் கட்சிக்கொடி வைக்க அனுமதி உண்டா? உயர் நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை பதில்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்பு படம்


வாகனங்களில் கட்சிக் கொடி வைக்க, தலைவர்கள் படம் வைக்க, போக்குவரத்தி சட்டத்தில் அனுமதி கிடையாது என்று, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

 

சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் அனுமதியின்றி பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளை அப்புறப்படுத்த வேண்டும்; சாலைகள் நடுவே அரளி செடிகள் நட உத்தரவிட வேண்டும் என்று கோரி, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார் .

 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசியல் கட்சியினர் தங்களது வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்வது, தலைவர்களின் படங்களை வைத்து கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக்கொள்வது போன்றவைகளை செய்யாமல் இருந்தாலே பெரும்பாலான விபத்துகள் தடுக்கப்படும் என்று கருத்து தெரிவித்தனர்.

 

மேலும், மோட்டார் வாகன சட்டப்படி இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி உள்ளதா? இந்த நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என தமிழக உள்துறை செயலாளர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் போக்குவரத்து துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் கட்சி கொடி கட்டுவதற்கு மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை. தலைவர்களின் படங்களை வைத்துக்கொள்ளவும், தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதி கொள்ளவும் அனுமதி இல்லை என்று போக்குவரத்து துறை பதிலளித்தது

 

இதையடுத்து, வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Leave a Reply