பொன்பரப்பி கிராமத்தில் நடந்தது என்ன? ஏப்.24-ல் ஆர்ப்பாட்டம் நடத்த விசிக முடிவு

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் நடந்த வன்முறையில், ஏராளமான வீடுகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக பலர் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.

 

மக்களவை தேர்தல் நடைபெற்ற ஏப். 18ஆம் தேதி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்பரப்பியில், விடுதலைக்கட்சிகள் தலைவர் திருமாவளனின் சின்னமான பானையை உடைத்ததால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

 

இதில், ஒருதரப்பினர் அரிவாள், கத்தி, உருட்டுக்கட்டை எடுத்துக்கொண்டு பொன்பரப்பி கிராமத்தில் புகுந்து தலித் வீடுகளை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறையில் ஏராளமான வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. காயமடைந்த 15க்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இதுதொடர்பாக, 25-க்கு மேற்ப்பட்டோர் கைது செய்து வழக்கு போடப்பட்டு உள்ளது. தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வேதனையும், கண்டனமும் தெரிவித்துள்ளன. பொன்பரப்பியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதன் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

பொன்பரப்பியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். இச்சம்பவம், தமிழனத்திற்கு அவமானம் என்று, மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தேர்தல் நாளில் பொன்பரப்பியில் நடந்த வன்முறையால் அங்கு மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.


Leave a Reply