கலவர பூமியானது கரூர்! நாஞ்சில் சம்பத் மீது தாக்குதல் முயற்சி!! இறுதிகட்ட பிரசாரத்தில் வன்முறையால் பரபரப்பு

கரூர் அருகே வெங்கமேட்டில், திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாஞ்சில் சம்பத்தை தாக்க முயற்சி நடந்தது. இதில் அவரது வேன் கண்ணாடி உடைந்தது. இருதரப்பு மோதலால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.

 

கரூர் வெங்கமேட்டில், மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து, நாஞ்சில் சம்பத் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். திமுக கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி, திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, கொள்கை பரப்பு துணை செயலாளர் கரூர் முரளி ஆகியோர் உடன் இருந்தனர்.

 

இன்று மாலை 4:30 மணியளவில், பிரசார கூட்டத்தில் இருந்த அதிமுகவினர் என்று சந்தேகிக்கப்படும் சிலர், கற்களை வீசி தாக்க தொடங்கினர். அவர்களை தடுக்க சென்ற காவலர்கள் இருவருக்கு இதில் காயமேற்பட்டது. பொது மக்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.

 

அதை தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாஞ்சில் சம்பத் மீதும் தாக்குதல் முயற்சி நடந்தது. எனினும், கட்சியினர் அவரை பத்திரமாக மீட்டு அழைத்து சென்றனர். இத்தாக்குதலில் அவரது கார் சேதமடைந்தது.

 

இதுகுறித்து, ‘குற்றம் குற்றமே’ சிறப்பு செய்தியாளருக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில், வெங்கமேட்டில் நான் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு கும்பல் என்னை தாக்க வந்தது.

 

கட்சியினர் என்னை காப்பாற்றி பாதுகாப்பாக அழைத்து சென்றனர். எனது கார் டிரைவர் எங்கோ அழைத்து செல்லப்பட்டார் என்று தெரியவில்லை. கல்வீச்சு தாக்குதலில் பெண்களுக்கும் காயமேற்பட்டது என்று தெரிவித்தார்.

 

திமுக – அதிமுக மோதல் சம்பவத்தால், கரூர் வெங்கமேட்டில் பரபரப்பு நிலவுகிறது.

– சிறப்பு செய்தியாளர்


Leave a Reply