வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்து ஜனாதிபதி அதிரடி உத்தரவு! ஜனநாயகப்படுகொலை என எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆரம்பத்தில் இருந்தே பெரும் பரபரப்பை கொண்டிருந்த வேலூர் மக்களவை தொகுதியில் , திமுக சார்பில், அதன் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுகின்றனர்.

 

கடந்த மார்ச் 30 ஆம்தேதி, துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, ரூ. 10.5 லட்சம் பணத்தை கைப்பற்றினர். அதன் தொடர்ச்சியாக, சில தினங்களில், துரைமுருகனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் திமுக பிரமுகர் வீட்டில் இருந்து ரூ. 11.53 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வருமான வரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், கதிர் ஆனந்த் மற்றும் இரண்டு திமுக பிரமுகர்கள் மீது காவல்துறிய வழக்குப்பதிவு செய்தது.

 

அதிகளவில் பணம் கைப்பற்றப்பட்டதால், வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக, நேற்று தகவல் பரவியது.

 

இன்று காலை, இதற்கு விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், இவ்விவகாரத்தில் இன்னும் முடிவெதுவும் எடுக்கவில்லை என்றது.

 

இந்நிலையில், வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்து, குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, குடியரசு தலைவர் இந்த உத்தரவில் கையெழுத்திட்டார். வேலூர் மக்களவை தொகுதியில் மட்டுமே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது; குடியாத்தம், ஆம்பூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்.

 

இது அரசியல் கட்சியினர் இடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், வேலூர் தொகுதி தேர்தல் ரத்தை ஏற்கவில்லை; திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.

 

வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்தது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை; எதிர்க்கட்சிகளின் பயத்தை இது காட்டுகிறது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Leave a Reply