நடிகர் ரித்தீஷ் உடல் சொந்த ஊரான மணக்குடியில் இன்று மாலை அடக்கம்

Publish by: --- Photo :


இராமநாதபுரம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வந்தார்.

தேனி தொகுதி வேட்பாளர் ரவீந்திநாத் குமாரை ஆதரித்து கடந்த சில நாட்களாக வாக்கு சேகரித்த அவர், நேற்று சொந்த ஊரான ராமநாதபுரம் வந்தார். அங்கு அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து வாக்கு திரட்டினார்.

மதிய உணவுக்கு பிறகு ராமநாதபுரம் ஆர்.ஆர். சேதுபதி நகரில் உள்ள தனது வீட்டில் இருந்த ரித்தீசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரி சோதனை செய்த டாக்டர்கள் ரித்தீஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இதனை கேட்டு உறவினர்களும், அ.தி.மு.க.வினரும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்தபோது சிலர் இதய துடிப்பு இருப்பதாக கூறியதை தொடர்ந்து மற்றொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கும் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் உறுதி செய்தனர்.

மரணம் அடைந்த ரித்தீசுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஹிருத்திக் ரோ‌ஷன், ஹாரிக் ரோ‌ஷன் என்ற மகன்களும், தானவி என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.


ரித்தீஷ் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். தேர்தல் பிரசாரத்திற்கு வந்த அவர், இறந்து விட்ட நிலையில் குடும்பத்தினர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தனர்.

மரணம் அடைந்த ரித்தீஷ் உடல், ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 5 மணிக்கு ரித்தீஷ் உடல் அவரது சொந்த ஊரான மணக்குடியில் அடக்கம் செய்யப்படுகிறது.

ரித்தீசின் மறைவுக்கு தென் இந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளன.

நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் டைரக்ட் செய்த ‘‘கானல் நீர்’’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த ரித்தீஷ் தொடர்ந்து நாயகன், பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சில நாட்களுக்கு முன்பு ‘‘எல்.கே.ஜி.’’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தி.மு.க.வில் மு.க. அழகிரியின் ஆதரவாளரான ரித்தீஷ், 2004-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். மு.க. அழகிரி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால், ஜே.கே.ரித்தீசும் தி.மு.க.வில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணைந்தார். தற்போது மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.


Leave a Reply