கட்சி தலைவர்களின் பேச்சால் கோபமடைந்து டிவி மீது ரிமோட்டை தூக்கி வீசிவது போல், மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் விளம்பரத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
மக்களவை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. அவருக்கு டார்ச்லைட் சின்னம் தரப்பட்டுள்ளது. தற்போது அவர் தமிழகம் முழுவதும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சில கட்சி தலைவர்களின் பேச்சை டிவியில் கேட்டு அவர் கோபமடைந்து, டிவி மீது ரிமோட்டை தூக்கி வீசிவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
அதை தொடர்ந்து, குடும்ப அரசியல் நடத்துவோருக்கு உங்கள் ஓட்டா? அல்லது உரிமைக்கு போராடும் போது அடித்து துரத்தியவர்களுக்கு நீங்கள் வாக்கு செலுத்துவீர்களா? நலத்திட்டங்கள் பெயரில் விளை நிலங்களை அழித்தவர்களுக்கா? கார்ப்பரேட் கைக்கூலிகளின் அரசுக்கா?
வரும் ஏப். 18ஆம் தேதி வாக்காளர்கள் தலை குனிந்து கும்பிடாமல், நிமிர்ந்து ஓட்டு போடுங்கள் என்று கமல்ஹாசன் கேட்டுக் கொள்கிறார். வீடியோவின் இறுதியில் டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி அவர் கேட்பது அந்த வீடியோவில் உள்ளது. வித்தியாசமான முறையில் அவர் வெளியிட்டுள்ள தேர்தல் பிரசார விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
—