கச்சிராயப்பாளையம் அருகே வாலிபர் அடித்து கொலை!

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் மத்தியகுறிஞ்சியை அடுத்த சடையம்பட்டு கிராமத்தில் கோமுகி ஆற்றில் இன்று வாலிபர் ஒருவர் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைபார்த்த அந்த பகுதியினர் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசாா் ஆற்றில் பிணமாக கிடந்த வாலிபரை
மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில் பிணமாக கிடந்தவர் மத்தியகுறிஞ்சி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (30) என்பது தெரியவந்தது. கடந்த 5 ஆண்டுகளாக அவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்போது சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மர்மகும்பல் அவரை அடித்து கொன்று கோமுகி ஆற்றில் பிணத்தை வீசி சென்றிருப்பது தெரிந்தது. அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன் விரோதம் காரணமாக வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கள்ளக்காதல் விவகாரம் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Leave a Reply