2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர்! – ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லிகேபிடல்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் போட்டியில் மூன்றாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெயர் மாற்றத்துடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா ஃபீல்டிங் தேர்வு செய்தார்.
மும்பை அணி சார்பாக யுவராஜ் சிங், முதன்முறையாக இன்றைய போட்டியில் களம்கண்டார். அதேபோல், மும்பை அணி சார்பாக 17 வயதான ரஷீக் சலாம் என்ற இளம்வீரர் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானார். மும்பை அணி சார்பாக முதல் ஓவரை வீசியவரும் அவரே மும்பை கேப்பிடல்ஸ் அணியின் இன்னிங்ஸை இளம்வீரர் ப்ரித்வி ஷா மற்றும் அனுபவ வீரர் ஷிகர் தவான் ஆகியோர் தொடங்கினர். இந்த ஜோடி நீண்டநேரம் தாக்குப்பிடிக்கவில்லை. மெக்லெனஹன் வீசிய இரண்டாவது ஓவரிலேயே ப்ரித்வி ஷா, 7 ரன்களுடன் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் ஸ்ரேயார் ஐயர் 16 ரன்களில் வெளியேற, மூன்றாவது விக்கெட்டுக்கு தவானுடன் இங்ரம் கைகோத்தார். இந்த ஜோடி 83 ரன்கள் சேர்த்த நிலையில், இங்ரம் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி அணி 13 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. அவர் ஆட்டமிழந்த சிறிதுநேரத்திலேயே தவானும் 43 ரன்களுடன் நடையைக் கட்டினார். தவானுக்குப் பின்னர் டெல்லி அணி, கீமோ பவல் மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இருப்பினும் மறுமுனையில் அதிரடி காட்டிய ரிஷப் பன்ட் 18 பந்துகளில் அரைசதமடித்து மிரட்டினார். சிக்ஸர்களாக விளாசி மிரட்டிய பன்ட் அதிரடியால் டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. 27 பந்துகளைச் சந்தித்த்த ரிஷப் பன்ட் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி தரப்பில் மெக்லெனஹன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்


Leave a Reply