முன்னாள் காதலி கத்ரீனாவுக்கு காரைப் பரிசளித்த சல்மான் கான்

சல்மான் கான் சில நாள்களுக்கு முன், பிரபல ஆடம்பரக் கார் தயாரிப்பாளரான, ‘ரேஞ்ச் ரோவர்’ நிறுவனத்தின் கார்கள் பலவற்றை விலைக்கு வாங்கினார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், நீண்ட நாள்களுக்குப் பிறகு கத்ரீனா கைஃபுடன் இணைந்து நடிக்கும் படம் ‘பாரத்’. அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கும் இந்தப் படம், ‘ஓடே டு மை ஃபாதர்’ எனும் கொரிய மொழிப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்.

நிஜ வாழ்க்கையில், முன்னாள் காதலர்களான கத்ரீனாவும் சல்மானும் மீண்டும் திரையில் இணைவதால், ரசிகர்கள் ஏற்கெனவே உற்சாக மிகுதியில் இருந்தனர். இந்நிலையில், அதை அதிகமாக்கும் விதத்தில் இப்போது இன்னொரு செய்தியும் பாலிவுட் வட்டாரத்தில் வெளியாகியுள்ளது
சல்மான் கான் சில நாள்களுக்கு முன், பிரபல ஆடம்பர கார் தயாரிப்பாளரான, ‘ரேஞ்ச் ரோவர்’ நிறுவனத்தின் கார்கள் பலவற்றை விலைக்கு வாங்கினார். அந்தக் கார்களை தன் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆளுக்கு ஒன்றாகப் பரிசளித்தார். அந்த வரிசையில், நடிகை கத்ரீனா கைஃபுக்கும் ஒரு ரேஞ்ச் ரோவர் காரை பரிசாக வழங்கியுள்ளதாகத் தகவல்கள் பரவிவருகின்றன.

இயல்பிலேயே கார் பிரியரான கத்ரீனாவின் கலெக்‌ஷனில் இந்தக் கார் தற்போது சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது. என்றாலும், அந்தக் கார் சல்மான் பரிசளித்தது தானா என்பது மட்டும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

‘கண்டிப்பாக அது சல்மான் கத்ரீனாவுக்குப் பரிசாகக் கொடுத்ததாகத்தான் இருக்கும். குடும்ப உறுப்பினர்களைத் தவிர கத்ரீனாவுக்கு மட்டும்தான் அவர் இதைச் செய்கிறார் என்றால், விரைவில் இருவரும் மீண்டும் இணையப்போகின்றனர்’ என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.


Leave a Reply