பொள்ளாச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதற்குள் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா? – விஜய் சேதுபதி காட்டம்

பொள்ளாச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதற்குள் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா என்று விஜய் சேதுபதி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. தியாகராஜன் குமாரராஜா தயாரித்துள்ள இப்படம் மார்ச் 29-ம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், ‘ஆரண்ய காண்டம்’ படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம், திருநங்கையாக விஜய் சேதுபதி என இப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகவுள்ளன.

இப்படத்தை விளம்பரப்படுத்தும் பொருட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஜய் சேதுபதி. அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதில், சமீபத்தில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்த கேள்விக்கு விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி விவகாரத்தில் சிலர் பெண்களைக் குறை சொல்கிறார்கள். அது மிகவும் தவறானது. என்னைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதற்குள் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா? ஒரு குழந்தைக்குக் கூட அது தவறு என்று தெரியும். அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலை என்னால் பத்து வினாடிகள் கூட கேட்க முடியவில்லை. அதற்கே மனது அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது.

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

தற்போது விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிக்கப்பட்டு, சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.


Leave a Reply