5 வயது சிறுமியை மரண படுக்கையில் இருந்து காப்பாற்றிய 2 காவலர்கள்..!
இதய நோயால் உயிருக்கு போராடி 5 வயது சிறுமியின் சிகிச்சைக்கு உதவிய சென்னை நகர காவல்துறை தலைமை காவலர் மற்றும் காவல் ஆய்வாளரின் மனித நேய சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அடுத்த கார்த்திக் என்பவரின் ஐந்து வயது மகள் கவிஸ்காவுக்கு பிறந்ததிலிருந்தே இதய பிரச்சனை இருந்தது.
சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டபோதெல்லாம் பணமில்லாத சூழலால் தற்காலிக சிகிச்சை பார்த்த நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தலைமை காவலரான செந்தில் முப்பதாயிரம் ரூபாயை தந்துள்ளார். இந்த நிலையில் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு ஐந்து லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறிய நிலையில் உடைந்து போன கார்த்திக்கின் நிலையை தலைமை காவலர் செல்வம் தான் பணிபுரியும் நந்தம்பாக்கம் காவல் ஆய்வாளர் தங்கராஜுக்கு தெரிவித்தார். இதையடுத்து 45 ஆயிரம் ரூபாய் தந்து உடனடியாக அறுவை சிகிச்சைக்கு இரு காவலர்களும் ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட 7 மணி நேர அறுவை சிகிச்சை வெற்றி அடைந்தது. பின்னர் நண்பர்கள், தெரிந்தவர்களிடம் பண உதவி கேட்டுப் பெற்ற காவலர்கள் சிறுமிக்கு அறுவை சிகிச்சை தொகையை கட்டியுள்ளனர். மரணத்தின் பிடியில் சென்ற சிறுமியின் உயிரை காப்பாற்றிய செயல் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.







